Skip to content

Tamil Bible (Union Version)

எண்ணாகமம் 34

1கர்த்தர் மோசேயை நோக்கி: 2நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது, 3உங்கள் தெற்புறம் சீன்வனாந்தரம் தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும். 4உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம் வரையில் போய், தெற்கிலே காதேஸ் பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய், 5அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதி வரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும். 6மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும். 7உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து, 8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய், 9அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும். 10உங்களுக்குக் கீழ்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து, 11சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல்பரியந்தமும் அதன் கீழ்கரையோரமாய், 12அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார். 13அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே. 14ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். 15இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான். 16மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி: 17உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே. 18அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள். 19அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், 20சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும், 21பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும், 22தாண் புத்திரரின் கோத்திரத்துக்குக் யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும், 23யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும், 24எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும், 25செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும பிரபுவும், 26இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும், 27ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும், 28நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார். 29கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக்கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.

Tamil Bible (Union Version). Tamil Bible Unicode: Word of God Ministries (wordofgod.in).

Books

✦ Explain this verse with AI AI explanations, Bible Q&A, characters, maps and more — in the Truth of Bible app →

Reading settings

Theme
Text size
100%
Layout

Loading the Bibles…

Your choice is remembered on this device and used for reading, search and the verse screen.