Skip to content

Tamil Bible (Union Version)

யோசுவா 10

1யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததை, கிபியோனின் குடிகள் இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, 2கிபியோனின் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். 3ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசீன் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி: 4நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் இஸ்ரவேல் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான். 5அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள். 6அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை ரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச்சொன்னார்கள். 7உடனே யோசுவாவும் அவனோடே கூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும்கில்காலிலிருந்து போனார்கள். 8கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். 9யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான். 10கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக்கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி,அசெக்காமட்டும் முறிய அடித்தார்கள். 11அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். 12கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான். 13அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுவதும் நடுவானத்தில் நின்றது. 14இப்படிக் கர்ததர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை. கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். 15பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூட கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான். 16அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள். 17ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியிலே ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது. 18அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள். 19நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கைகயில் ஒப்புக்கொடுத்தார் என்றான். 20யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள். 21ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை. 22அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஜந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான். 23அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள். 24அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம்அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்டவந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள். 25அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான். 26அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள். 27சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் கெபியின் வாயிலே அடைத்தார்கள். 28அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான். 29மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான். 30கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான். 31லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான். 32கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்பக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான். 33அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும், ஒருவனும் மீதியாயிராதபடி வெட்டிப்போட்டான். 34லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் பறப்பட்டு, அதற்கு எதிரே பாளமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி, 35அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான். 36பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யத்தம்பண்ணி, 37அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்தஎல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல்பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம் பண்ணினார்கள். 38பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைவரோடுங்கூட தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, 39அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான். 40இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி, 41காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சா மட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான். 42அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். 43பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடுங்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

Tamil Bible (Union Version). Tamil Bible Unicode: Word of God Ministries (wordofgod.in).

Books

✦ Explain this verse with AI AI explanations, Bible Q&A, characters, maps and more — in the Truth of Bible app →

Reading settings

Theme
Text size
100%
Layout

Loading the Bibles…

Your choice is remembered on this device and used for reading, search and the verse screen.