Skip to content

Tamil Bible (Union Version)

யோபு 15

1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: 2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, 3பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ? 4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர். 5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர். 6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது. 7மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? 8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ? 9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? 10உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. 11தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ? 12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன? 13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர். 14மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 16அநியாயத்தைத் தண்ணீரைப் போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? 17உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். 18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். 19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை. 20துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுக்கிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது. 21பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான். 22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான். 23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். 24இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும். 25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான். 26கடினக்கழுத்தோடும், பருத்தகுமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான். 27அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது. 28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான். 29அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. 30இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான. 31வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும். 32அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை. 33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப்போலவும் அவன் இருப்பான். 34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும். 35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.

Tamil Bible (Union Version). Tamil Bible Unicode: Word of God Ministries (wordofgod.in).

Books

✦ Explain this verse with AI AI explanations, Bible Q&A, characters, maps and more — in the Truth of Bible app →

Reading settings

Theme
Text size
100%
Layout

Loading the Bibles…

Your choice is remembered on this device and used for reading, search and the verse screen.